Archive for ஜூலை, 2007

நாயர் பானம்

அர்ச்சகர் போல்
தோளில் துண்டைப்
போட்டுக் கொண்டு
எங்கள் நாயர்
‘ டர்’ ரென்று டீயை
ஆற்றும் போது
டப்பா கிழியவில்லையே என்று
ஜவுளிக் கடை சக்கரய்யா
சன்னமாய்ச் சிரித்திடுவார்
பாலென்று கேட்க,
நீர் கொஞ்சம் விட்டு
நுரைக்காக
நீள முழம் போடும்போது
விரியும் வெள்ளைத்துகில் வழியே
நாயரின் தொந்தி
நலுங்குவதை
நகராட்சித் தோட்டி
நல்லம்மா பார்த்து
நறுக்கென்று
வாய்புதைப்பாள்
ஆரத்திக் கரைசலில்
சுன்ணாம்பு கரைதல் போல்
நாயர் டிகாக்ஷன்
பால் டீயில்
சாயம் அடிக்கிறது
பால் கிளாஸை
வாயில் வைத்துப்
பக்குவமாய்
உறிஞ்சும் போது
நாயரின்
நுரைத் தயாரிப்புகள்
நளினமாய்
மொரமொரக்கின்றன
டீயில்………இல்லையென்று
நீட்டிவிட்டால்
ஓர் நொடிக்குள்
அஸ்காவில்
அலுங்காத
தேக்கரண்டி
டீக்கிளாஸில் மணியடிக்கிறது
பின்னாலே டீக்கூட
தேனாக இனிப்பெடுக்கிறது
வரிசையில் நின்றாலும்
வந்தவர் சிடுத்தாலும்
வாய் வைத்த கிளாஸை
வெந்நீரில் விட்டு
வெளியே எடுப்பதால்
நாயர் கிளாஸுக்கு
நல்ல கிராக்கி
மார்ச் மாத
நோன்பிருக்கும்
மாணவ மணிகள்
நான்கு மணிக்கு வந்து
நாயர் பானம்
பருகிவிட்டால்
மணி எட்டான பின்னாலும்
கொட்டாவி விடுவதில்லை
பாவம் நாயர் வாய்
அவரின்
ஏற்ற இரக்கமிடும்
இரண்டு கை போல
மேலும் கீழும்
ஏறி இறங்கி
கொட்டாவி
ஆற்றுகிறது

நன்றி: கணையாழி

ஒரு மழை இரவில் பிளாட்பாரம்

நெருங்கிவரும் மின்ரயிலின் முகப்பொளியில்
மழை, பொன்னூசிகளாய்ப் பூமியில் இறங்கும்
தண்டவாளங்கள் தங்கப்பாளங்களாய்ப் பளபளக்கும்
அஸ்பெஸ்டாஸ் கூரை ஓட்டை வழியே
சாரைப்பாம்பாய் மழைநீர் தூணில் இறங்க
தரையில் படரும் ஈரம்
போதாத் துணியில் புதைந்த உடல்களைப்
புரட்டி உருட்டும் முடிந்தவரைக்கும்
காலிப்பாத்திரங்களை மோப்பம் பிடித்து மோப்பம் பிடித்துக்
கடைசிவரை சென்ற சொறிநாய்
ஞாபக மறதியாய் மீண்டும் அதேபோல் செய்துவரும்
காலையில் கூவிக்கூவிப் பழம் விற்றவள் முகம்
கூடையில் ஒரு பழமாய்க் குப்புறக் கிடக்கும்
வந்தவுடன் புறப்படும் வண்டி
குடையை மடக்கி ஏறும்
கடைசிப் பயணிக்காய்க் காத்திருந்ததுபோல் புறப்படும்
எஜமானன் குறட்டைவிட்டுத் தூங்க
குரங்கு சத்தமில்லாமல் கொசு அடிக்கும்

நினைவு

கடந்து போனவள்
யார் என்று தெரியவில்லை
தாழம் பூ மட்டும்
கமகமக்கிறது . . .

நன்றி: ‘ஜெயந்தி’ சிற்றிதழ்

நாய்கள் அல்ல

கல்யாண வீ ட்டில்
கைவைத்த எலை எல்லாம்
கழிவாகி வெளிவந்த கணத்தில்
ஓடி விழுந்து
உறுமல் பொருமலிட்டு
நாத்தொங்க
நக்கித் தின்றதுகள்
நாய்கள் அல்ல

நன்றி: ‘ஜெயந்தி’ சிற்றிதழ்

தெரிந்த மனிதரின் தெரியாத சிலை

தூரத்து ட்யூப் லைட்
மின்னிய மின்னல்கள்
ஏதோ ஒன்றில் பட்டு
எதிரொளியானது
ஏதது என்று விரைந்து பார்க்கையில்
பளிங்குக் கல்வெட்டே
பதிலாய் நின்றது
படித்துப் பார்த்தால்
தெரிந்த மனிதரின் தெரியாத சிலை

நடக்காதீர் நடைபாதைகளில். . . - உரப்புளி நா.ஜெயராமன்

நடக்காதீர் நடைபாதைகளில்
மீறி நடந்தால்
அங்கு வாழும் குடும்பங்களில்
அத்துமீறி பிரவேசித்தவர் ஆவீர்கள்.