ஒரு மழை இரவில் பிளாட்பாரம்

நெருங்கிவரும் மின்ரயிலின் முகப்பொளியில்
மழை, பொன்னூசிகளாய்ப் பூமியில் இறங்கும்
தண்டவாளங்கள் தங்கப்பாளங்களாய்ப் பளபளக்கும்
அஸ்பெஸ்டாஸ் கூரை ஓட்டை வழியே
சாரைப்பாம்பாய் மழைநீர் தூணில் இறங்க
தரையில் படரும் ஈரம்
போதாத் துணியில் புதைந்த உடல்களைப்
புரட்டி உருட்டும் முடிந்தவரைக்கும்
காலிப்பாத்திரங்களை மோப்பம் பிடித்து மோப்பம் பிடித்துக்
கடைசிவரை சென்ற சொறிநாய்
ஞாபக மறதியாய் மீண்டும் அதேபோல் செய்துவரும்
காலையில் கூவிக்கூவிப் பழம் விற்றவள் முகம்
கூடையில் ஒரு பழமாய்க் குப்புறக் கிடக்கும்
வந்தவுடன் புறப்படும் வண்டி
குடையை மடக்கி ஏறும்
கடைசிப் பயணிக்காய்க் காத்திருந்ததுபோல் புறப்படும்
எஜமானன் குறட்டைவிட்டுத் தூங்க
குரங்கு சத்தமில்லாமல் கொசு அடிக்கும்

1 பின்னூட்டம் இதுவரை

  1. rajamragu on ஜூலை 24, 2007

    ஓஹோ! ஒரு ப்ளாட்ஃபாரத்தில் கவனிக்க இவ்வளவு உள்ளதா! கவிதை நன்றாக உள்ளது. நிறைய எழுதுங்கள். எங்கள் தமிழும் வளரட்டும்.

Leave a reply