வண்ணத்துப்பூச்சிகள்-உரப்புளி நா.ஜெயராமன்
வானவில்லின் வட்டப்பாதையில்
ஏந்திழை ஒருத்தி இடைமிகநெளிய
எடுத்த அடிகளில் எழுந்த தூசியாய்
வண்னத்துப் பூச்சிகள் மண்மீதெழுந்திடும்
கண்ணாடிச் சன்னல் சிறகுகள் எல்லாம்
காஞ்சிபுரமாய்ப் பார்டர் விரித்திடும்
நிறங்களைக் காட்டி மயக்கிடும் பூக்களின்
நெருக்கம் விலக்கித்
தேன்கப்பிய மலரிதழ் நாடி அமர்கையில்
யானைத் துதிக்கையாய் அதன் குழல் நீண்டிடும்
தேனீப் போல சேர்த்து வைத்திருக்கும்
சிந்தை மட்டும் சிறிதுமிலாததால்
தினக்கூலிகளாய்ப் பொழுதினைத் தின்றிடும்
பெண்மலர் நாடி ஆண்மலர் சொன்ன
ஆவல் செய்திகள் ஆயிரம் பேசிடும்
பேசும்போது ‘பொடி’ வைத்துப்பேசிடும்
பச்சைப் புல்லைப் பரப்பிய மன்றில்
பார்க்கும்சிறுவர் வியப்பில் மூழ்க
சிறகுக் கைகளைசிலிர்த்து விரித்துப்
பரத நாட்டியம் ஆடிக் காட்டிடும்
சீண்டிப் பார்க்க கைகள் நீண்டிடில்
சினிமா நடிகையாய்க் கம்பி நீட்டிடும்
அக்கினி வெயிலில் உத்தரக்கட்டையில்
அமர்ந்து கொஞ்சம் தூக்கம் போட்டிடும்
அந்தி மாலையில் மஞ்சள் பாயை
விரிக்கும் வானை விளித்த படியே
அந்தமில் இறைவனின் அருகே அமர
ஆத்மப் பயணம் செய்யும் ஜீவனாய்
உயர உயரப் பறந்து செல்கையில்
காற்று வெளியில் கரும் புள்ளியாய்க் கரைந்திடும்
நன்றி: கணையாழி