அளவுச் சாப்பாடு

எழுபத்தொன்னில்
எம்பது காசு டோக்கன் வாங்கினால்
எலை நெறையாச் சாப்பாடு
அப்பளம் சுடச்சுட
நெய் மிதக்கும் பருப்பு
கறிகாய்க் கூட்டு
தின்னத் தின்னத் தேடிவரும்
சாம்பாரு ரசம் மோர்க்குழம்பு
வத்தக் குழம்பு என வகைவகையாய்ச்
சோறிழுக்கும்
பாயாசம் மூலையில்
பவ்வியமாய்க் காத்திருக்கும்
கடைசிக் கவளத்துக்கும்
காவலாய் ஊறுகாயிருக்கும்.
இப்போ
இருபத்தஞ்சு ரூபாய்க்கு
டோக்கன் வாங்க
இம்புட்டூண்டு காய் குழம்பு
இத்தினூண்டு கிண்ணங்களில்
வட்டமிடத் தட்டு வரும்
இக்கலிலே பிள்ளை வைத்து
எழில் நிலாக் காட்டி
அன்னை ஊட்டும்
அமுதிருக்கும் கிண்ண அளவே
சோறு வரும்.
கவனமாய் அள்ளி
உண்ண உண்ண
கிண்ணங்களால் டேபிள் நெறையும்
வயிறு நெறையாது
கடைசியாய்க் கிண்ணத்தில்
மோரிருக்கும்.
இருக்கட்டும்
மோருக்குச் சோறேது?

1 பின்னூட்டம் இதுவரை

  1. iniyaval1 on டிசம்பர் 15, 2007

    எழுபத்தொன்னில்
    எம்பது காசு டோக்கன் வாங்கினால்
    எலை நெறையாச் சாப்பாடு
    அப்பளம் சுடச்சுட
    நெய் மிதக்கும் பருப்பு
    கறிகாய்க் கூட்டு
    தின்னத் தின்னத் தேடிவரும்
    சாம்பாரு ரசம் மோர்க்குழம்பு
    வத்தக் குழம்பு என வகைவகையாய்ச்
    சோறிழுக்கும்

    வாழ்த்துக்கள் நன்றாக உள்ளது

Leave a reply