அளவுச் சாப்பாடு

எழுபத்தொன்னில்
எம்பது காசு டோக்கன் வாங்கினால்
எலை நெறையாச் சாப்பாடு
அப்பளம் சுடச்சுட
நெய் மிதக்கும் பருப்பு
கறிகாய்க் கூட்டு
தின்னத் தின்னத் தேடிவரும்
சாம்பாரு ரசம் மோர்க்குழம்பு
வத்தக் குழம்பு என வகைவகையாய்ச்
சோறிழுக்கும்
பாயாசம் மூலையில்
பவ்வியமாய்க் காத்திருக்கும்
கடைசிக் கவளத்துக்கும்
காவலாய் ஊறுகாயிருக்கும்.
இப்போ
இருபத்தஞ்சு ரூபாய்க்கு
டோக்கன் வாங்க
இம்புட்டூண்டு காய் குழம்பு
இத்தினூண்டு கிண்ணங்களில்
வட்டமிடத் தட்டு வரும்
இக்கலிலே பிள்ளை வைத்து
எழில் நிலாக் காட்டி
அன்னை ஊட்டும்
அமுதிருக்கும் கிண்ண அளவே
சோறு வரும்.
கவனமாய் அள்ளி
உண்ண உண்ண
கிண்ணங்களால் டேபிள் நெறையும்
வயிறு நெறையாது
கடைசியாய்க் கிண்ணத்தில்
மோரிருக்கும்.
இருக்கட்டும்
மோருக்குச் சோறேது?

Advertisements

அரசியல் களம்

அரசியலில்
அண்ணன் தம்பி முறை
கொண்டாடியதால்தான்
இன்று
பங்காளிச் சண்டை
போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஜனநாயக சோஷலிஸம்

மேட்டைக் கரைத்துப்
பள்ளத்தை நிரப்ப
மண்வெட்டியோடு போனவர்கள்
மேடு
பாறையாய் இருப்பதைக் கண்டார்கள்
வெடி வேண்டும் என்றார் சிலர்
உளி வேண்டும் என்றார் சிலர்
பாதை இரண்டானபின்னும்
உளியின் குரல்தான்
உச்ச ஸ்தாயியில் கேட்டுக்கொண்டிருக்கிறது

பொய்யின் தரிசனம்

சந்நிதானத்துக்கு
இரண்டும் வந்தது
உண்மையும் பொய்யும்
உண்மை
உமையை வணங்கப்
பொய்யோ
உமையின் சொரூபங்களை
உரசிப் பார்த்தது

கண்ணீர் விட்டு வளர்த்ததை….

அன்று
க ண் ணீ ர் விட்டு வளர்த்த சுதந்திரத்தை
இன்று
‘த ண் ணி’ விட்டு வளர்க்கிறார்கள்

இந்திய ஒற்றுமை

படேல்,
உன்னை
இரும்பு மனிதர் என
அழைத்ததால்தானோ என்னவோ
இப்போது
உன்னை
உருக்கப் பார்க்கிறார்கள்

துண்டு

எங்கள் எம் எல் ஏக்களின்
தோள்களிலிருந்து விழுவதால் தானோ, என்னவோ
அவர்கள் போடும்
பட்ஜெட்டிலுமிருந்தும்
விழுந்து விடுகிறது துண்டு !

குறிக்குத் தப்பு

அடித்துப் பிடித்துப் புறப்படு
முட்டி மோதி முன்னேறு
உரசல் கிரசலில் நெளியாதே
ஆணென்றும் பெண் என்றும் பாராதே
நொடியில் மரணமென்றாலும்
படியிலும் பயணம் செய்
ஏனெனில்
தாமதம் என்ற துப்பாக்கி
உன்னை நோக்கியே
குறிபார்த்திருக்கும்
குறிக்குத் தப்பு

கொஞ்சம் இரை-உரப்புளி நா.ஜெயராமன்

தண்டவாளங்கள் தடதடக்க
நிமிஷ நேரத்தில்
நிலையங்கள் கடக்க
நொடிக் கணக்கில்
பயணிகளைக் கக்கிவிட்டு
கக்கிய வேகத்தில்
வாரியும் விழுங்கிக்கொண்டு
விரையும் மின்சார ரயில்
இடிபாடுக்கிடையே
ஈயுங்கள் என இழையும்
புல்லாங்குழலுக்கும்
தட்டுங்கள் திறக்கப்படும்களுக்கும்
முருகா உருகாதாக்களுக்கும்
பார்மகளே பார்களுக்கும்
கொஞ்சம் இரை போட்டுச்செல்லும்

வண்ணத்துப்பூச்சிகள்-உரப்புளி நா.ஜெயராமன்

வானவில்லின் வட்டப்பாதையில்
ஏந்திழை ஒருத்தி இடைமிகநெளிய
எடுத்த அடிகளில் எழுந்த தூசியாய்
வண்னத்துப் பூச்சிகள் மண்மீதெழுந்திடும்
கண்ணாடிச் சன்னல் சிறகுகள் எல்லாம்
காஞ்சிபுரமாய்ப் பார்டர் விரித்திடும்
நிறங்களைக் காட்டி மயக்கிடும் பூக்களின்
நெருக்கம் விலக்கித்
தேன்கப்பிய மலரிதழ் நாடி அமர்கையில்
யானைத் துதிக்கையாய் அதன் குழல் நீண்டிடும்
தேனீப் போல சேர்த்து வைத்திருக்கும்
சிந்தை மட்டும் சிறிதுமிலாததால்
தினக்கூலிகளாய்ப் பொழுதினைத் தின்றிடும்
பெண்மலர் நாடி ஆண்மலர் சொன்ன
ஆவல் செய்திகள் ஆயிரம் பேசிடும்
பேசும்போது ‘பொடி’ வைத்துப்பேசிடும்
பச்சைப் புல்லைப் பரப்பிய மன்றில்
பார்க்கும்சிறுவர் வியப்பில் மூழ்க
சிறகுக் கைகளைசிலிர்த்து விரித்துப்
பரத நாட்டியம் ஆடிக் காட்டிடும்
சீண்டிப் பார்க்க கைகள் நீண்டிடில்
சினிமா நடிகையாய்க் கம்பி நீட்டிடும்
அக்கினி வெயிலில் உத்தரக்கட்டையில்
அமர்ந்து கொஞ்சம் தூக்கம் போட்டிடும்
அந்தி மாலையில் மஞ்சள் பாயை
விரிக்கும் வானை விளித்த படியே
அந்தமில் இறைவனின் அருகே அமர
ஆத்மப் பயணம் செய்யும் ஜீவனாய்
உயர உயரப் பறந்து செல்கையில்
காற்று வெளியில் கரும் புள்ளியாய்க் கரைந்திடும்

நன்றி: கணையாழி